கொசஸ்தலை ஆற்றி ல் தேங்கியுள்ள சாம்பல் கழிவுகளை அகற்ற வேண்டும் மின்வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


கொசஸ்தலை ஆற்றி ல் தேங்கியுள்ள சாம்பல் கழிவுகளை அகற்ற வேண்டும் மின்வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2017 1:29 AM IST (Updated: 22 Dec 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் தேங்கியுள்ள சாம்பல் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று மின்வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை ராயபுரத்தை சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ்குமார், மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் உள்பட 3 பேர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘வடசென்னை அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் கொண்டுசெல்லப்படும் குழாய் சேதம் அடைந்து கழிவுகள் வெளியேறி பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்த சாம்பல் கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், சாம்பல் கழிவுகள் தேங்கி கிடக்கும் பகுதியை ஆய்வு செய்ய ஏற்கனவே கமிட்டி ஏற்படுத்தியது. இந்த கமிட்டி இடைக்கால ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், ‘எண்ணூர் பகுதியில் நிலத்தடி நீரிலும், அந்த பகுதியில் விளைந்த கீரை, முருங்கை உள்ளிட்ட தாவரங்களிலும் உலோக நச்சுகள் கலந்துள்ளது. இவற்றை உண்பதால் எலும்பு, நரம்பு குறைபாடும், குழந்தைகளுக்கு மனநல குறைபாடும் ஏற்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.

அந்த மனு நேற்று நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கலைச்செல்வன், மகேசுவரன் ஆகியோர், ‘சாம்பல் கழிவுகளால் வடசென்னை அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. எனவே, குடிநீர் வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். சேதமடைந்த குழாய்களை மின்வாரியம் சீரமைத்து வருகிறது. இதனால் நிரந்தர தீர்வு ஏற்படாது. எனவே, புதிய குழாய்களை பதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, ‘வடசென்னை அனல் மின்நிலையத்தை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தேவையான குடிநீரை மின்வாரியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் தேங்கியுள்ள சாம்பல் கழிவுகளை பொதுப்பணித் துறையினர் மூலம் மின்வாரியம் அகற்ற வேண்டும். அதற்கான செலவுத்தொகையை மின்வாரியம் வழங்க வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

மனு மீதான விசாரணையை ஜனவரி 25-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Next Story