திருச்செந்தூர் கோவிலில் பிரகார மண்டபம் இடிக்கும் பணி தொடங்கியது


திருச்செந்தூர் கோவிலில் பிரகார மண்டபம் இடிக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 22 Dec 2017 9:30 PM GMT (Updated: 22 Dec 2017 7:34 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் பிரகார மண்டபத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி கடந்த 14-ந் தேதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கி திருச்செந்தூரைச் சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 43) என்பவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பழுதான பிரகார மண்டபத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய மண்டபம் கட்டப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரகார மண்டபம் முழுவதையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு கடைக்காரர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.

இதன்பின்னர் பிரகார மண்டபத்தை இடிக்கும் பணி நேற்று அதிகாலை தொடங்கியது. ராட்சத எந்திரம் மூலம் பிரகார மண்டபத்தின் மேற்கூரையில் இருந்து ஒவ்வொரு பகுதியாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பக்தர்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த இடிப்பு பணிகளை திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதற்கிடையே பிரகார மண்டபத்தின் அருகில் இருந்த 2 கடைகளும் அகற்றப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. இடிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டார்.

இந்த பிரகார மண்டபத்தில் 196 தூண்கள் உள்ளன. இந்த மண்டபத்தை முழுவதுமாக இடித்து முடிப்பதற்கு 4 முதல் 5 நாட்களாகும் என்று அற நிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story