வீடு திரும்ப உதவிய ‘வாட்ஸ் அப்’ தகவல் 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்தார்


வீடு திரும்ப உதவிய ‘வாட்ஸ் அப்’ தகவல் 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்தார்
x
தினத்தந்தி 24 Dec 2017 3:45 AM IST (Updated: 24 Dec 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் வாட்ஸ்-அப் தகவல் மூலம் மீண்டும் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

நெல்லை,

40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் வாட்ஸ்-அப் தகவல் மூலம் மீண்டும் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்தார். கண்ணீர் மல்க உறவினர்கள் அவரை வரவேற்றனர்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவருக்கு இப்ராகிம் ராவுத்தர் (வயது 75), அப்துல் ஹமீத் (67), இஸ்மாயில் (59), பஷீர் அகமது (54) ஆகிய 4 மகன்களும், ஜெயினம்பூ (71) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களில் இப்ராகிம் ராவுத்தர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை தேடி வெளியூருக்கு சென்றார். வெளியூர் சென்ற பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு தேடியும் இப்ராகிம் ராவுத்தர் கிடைக்காததால் அவர் உயிருடன் இருக்க மாட்டார் என்று குடும்பத்தினர் கருதினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்ராகிம் ராவுத்தர் மற்றும் அவருடைய புகைப்படம், குடும்ப விவரங்கள், தகவல் தெரிவிக்க வேண்டிய செல்போன் எண்கள் ஆகியவை வாட்ஸ்-அப்பில் வெளியாயின. இதை பார்த்த இப்ராகிம் ராவுத்தரின் உறவினர்கள் வாட்ஸ்-அப்பில் வெளியான தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர்.

அதில் பேசிய நபர், இப்ராகிம் ராவுத்தர் தற்போது மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டம் கராட் என்ற ஊரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து இப்ராகிம் ராவுத்தரின் சகோதரரான இஸ்மாயில், தன்னுடைய நண்பர் ஒருவருடன் மராட்டியத்தில் தன்னுடைய அண்ணன் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு அண்ணனை கண்டதும் இஸ்மாயில் கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவரிடம் இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்ராகிம் ராவுத்தர், தான் இங்கு உள்ள ஒரு கேண்டீனில் வேலை பார்த்து வந்ததாக கூறினார்.

உடனே இஸ்மாயில், இப்ராகிம் ராவுத்தரை அங்கிருந்து விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். தற்போது இப்ராகிம் ராவுத்தரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை கண்ணீர் மல்க கட்டித்தழுவி வரவேற்றனர். இப்ராகிம் ராவுத்தரை தங்களுடன் மீண்டும் சேர்த்த கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவருடைய குடும்பத்தினர் கூறினர்.

இதுகுறித்து இப்ராகிம் ராவுத்தர் கூறியதாவது:-

நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தேன். என்னுடன் வேலை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த உகேஷ், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா, பல்லவெட்டியை சேர்ந்த காஜா ஆகியோரிடம் எனது உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், எனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர்கள் எப்படி தகவல் தெரிவிப்பது என்று யோசித்தனர்.

அதன்பிறகுதான் வாட்ஸ்- அப் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தகவல் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி வாட்ஸ்- அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. நானும் என்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து விட்டேன். எனக்கு உதவிய என்னுடைய நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

Next Story