இளைஞர்களுக்கு, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அறிவுரை


இளைஞர்களுக்கு, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அறிவுரை
x
தினத்தந்தி 24 Dec 2017 3:30 AM IST (Updated: 24 Dec 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள் ஆன்மிக தேடலில் ஈடுபட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை,

சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ‘ஹரே கிருஷ்ணா’ அமைப்பு சார்பில் ‘ஸ்ரீ கிருஷ்ண பலராமர் யாத்திரை’ நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ஹரே கிருஷ்ணா சென்னை அமைப்பின் தலைவர் ஸ்தோக கிருஷ்ண தாசா தலைமை தாங்கினார்.

பெங்களூரு ‘இஸ்கான்’ அமைப்பின் துணை தலைவர் சஞ்சலப்பதி தாசா, வைஷ்ணவ அறிஞர் உ.வே.அரவிந்தலோசனன் சுவாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ரத யாத்திரையை ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கு ஒரு பாதை தேவைப்படுகிறது. எந்த வழியில் பயணித்தால், அந்த பாதை சிறப்படையும், வாழ்க்கை மேம்படும் என்பதை சொல்லி தருவதற்கு ஒரு சக்தி தேவைப்படுகிறது. தற்போது உள்ள இளைஞர்கள், அரசியல் பரபரப்புகளாலும், சமூக வலைத்தளங்களினாலும் மூழ்கடிக்கப்பட்டு உள்ளனர்.

இளைஞர்களுக்கு நல்ல வழிகளை சொல்லி தரும் நல்ல அரசியல் தற்போது இல்லை. ஆனால் ஹரே கிருஷ்ண இயக்கம், இளைஞர்களை தொடர்ந்து நல்வழி படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தில் ஆண்டுதோறும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே இருக்கிறது.

எனவே ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்கு இன்னும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. தனது பக்தி முழக்கத்தால் இளைஞர்களை நல்வழிப்படுத்தி வருகிறது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் அமெரிக்கா என்னும் ஒரு நாட்டை எல்லா வகையிலும் முன் உதாரணமாக பார்க்கிறார்கள். அந்த நாட்டின் டாலர் மதிப்பு, அரசாங்கம், நிர்வாகம், அரசியல் ஆளுமை, நாட்டின் செழிப்புத்தன்மை, வல்லரசு எனும் நிலைப்பாடு ஆகியவற்றை இளைஞர்கள் அதிசயமாக பார்க்கிறார்கள்.

ஆனால் அங்கு குடும்ப கலாசாரம் என்பது ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒரு ஆன்மீக தேடல் இருக்கிறது. அந்த தேடலில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரத யாத்திரையில் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், நிதாய், கவுரங்கா ஆகிய சாமி சிலைகள் இடம்பெற்று இருந்தன. எலியட்ஸ் கடற்கரையில் இருந்து தொடங்கிய ரத யாத்திரை மகாத்மாகாந்தி சாலை, இந்திராநகர், திருவான்மியூர் தெருக்கள் வழியாக சென்று இரவு வால்மீகிநகரில் உள்ள ‘ஹரே கிருஷ்ணா’ அமைப்பின் அலுவலகத்தை சென்றடைந்தது.

Next Story