முறைகேடாக பட்டா வழங்கிய தாசில்தாரை இடைநீக்கம் செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


முறைகேடாக பட்டா வழங்கிய தாசில்தாரை இடைநீக்கம் செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Dec 2017 1:41 AM IST (Updated: 24 Dec 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

முறைகேடாக பட்டா வழங்கிய தாசில்தாரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை வேளச்சேரியில் உள்ள தனது நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கோரி அளித்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதை எதிர்த்து ராமன் என்பவரது சார்பில் அவரது பவர் ஏஜெண்டான சகாதேவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் குறிப்பிடும் நிலம் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் என்றும், மனுதாரர் அதிகாரிகளுடன் கூட்டுசேர்ந்து ஆவணங்களை திருத்தி உள்ளதாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக ஒதுக்கிய நிலத்திற்கு பட்டா வழங்கக்கூடாது என்று தாசில்தாருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டு இருந்ததாகவும், அதை மீறி தாசில்தார் பட்டா வழங்கி இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சமுதாய நலக்கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மனுதாரர் அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். உயர் அதிகாரியின் உத்தரவை மீறி பட்டா வழங்கிய தாசில்தாரை பணி இடைநீக்கம் செய்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஒரு சொத்துக்கு பல ஆவணங்கள் முறைகேடாக பதிவு செய்யப்படுகிறது. நில அபகரிப்பாளர்களும், சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களும் கூட்டுசேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story