ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு ‘தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்த கூட்டுசதியின் வெளிப்பாடு’ எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கூட்டறிக்கை


ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு ‘தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்த கூட்டுசதியின் வெளிப்பாடு’ எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கூட்டறிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2017 5:15 AM IST (Updated: 25 Dec 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் செய்த கூட்டு சதியின் வெளிப்பாடு. இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது” என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சட்டமன்ற தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சந்தித்து இருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை தி.மு.க.வுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். அதேவேளையில், அதற்கு பின்னணியாக தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டுசதியை அறிந்து, பதவி ஆசைக்காக இப்படியும் சதி செய்வார்களா? என்று தி.மு.க.வினரை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள் தமிழக மக்கள்.

இரட்டை இலை சின்னத்தை தோற்கடிப்பதன் மூலம் ஒன்றுபட்டு அசைக்க முடியாத சக்தியாக நிற்கும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை எப்படியாவது பறித்துவிட வேண்டும். எம்.ஜி.ஆரின் செல்வாக்கிற்கும், ஜெயலலிதாவின் புகழுக் கும், களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் திட்டமிட்டு செய்த கூட்டு சதியின் வெளிப்பாடாக இந்த தேர்தல் முடிவு அமைந்து இருக்கிறது.

தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், ஜெயலலிதா வாழ்ந்த போதும், வாழ்வுக்கு பின்னும், அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரனும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ரகசிய உடன்பாட்டின் விளைவுதான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு.

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன், தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் உள்ள செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்பதற்காகவே, டி.டி.வி.தினகரனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, தனது வாக்கு வங்கியை தினகரனுக்கு திருப்பிவிட்டு அதிக வாக்குகள் பெற செய்திருக்கிறது தி.மு.க.

எம்.ஜி.ஆர். கண்டெடுத்த வெற்றி சின்னம், ஜெயலலிதா மீட்டெடுத்த மக்கள் சின்னம் இரட்டை இலையை தோற்கடிப்பேன் என்று தினகரன் கூக்குரல் இட்டதும், அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்வேன் என்று கூப்பாடு போட்டதும், தி.மு.க. வுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம் தந்த துணிவின் காரணமாகத்தான் என்பது தற்போது நிரூபணம் ஆகி இருக்கிறது.

ஜெயலலிதா வாழும் போதே அவருக்கு எதிராக சதிச்செயல் புரிந்து, ஜெயலலிதாவால் தன்னுடைய கண்ணிலேயே படக்கூடாது என்று போயஸ் தோட்டத்தைவிட்டு விரட்டப்பட்டதுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தோடு கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் தனக்கு வாழ்வு தந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னும், தொடர்ந்து துரோகம் செய்வதையே தனது வாழ்க்கை முறையாக கொண்ட தி.மு.க.வுடன் கைக்கோர்த்து இருப்பது துரோகத்தின் உச்சம் ஆகும்.

தி.மு.க.வை லஞ்ச ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக உலகத்தின் முன் நிறுத்திய 2ஜி ஊழலை, வெளிச்சம் போட்டு காட்டியவர் ஜெயலலிதா தான் என்பதை நாடே அறியும். ஆனால் இந்த ஊழல் வழக்கில் இருந்து ஆ.ராசாவும், கனிமொழியும் விடுதலையானது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று வாழ்த்துச்சொல்லி, ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகத்தை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெளிப்படுத்தி காட்டிக்கொண்டார் டி.டி.வி.தினகரன். அந்த துரோக செயலுக்கு பரிசாக தி.மு.க.வின் வாக்குகளை வெட்கமின்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவு எடுத்து காட்டுகிறது.

அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் நேரடியாக மோதி எந்த ஜென்மத்திலும் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய கட்சிக்கும் தன்னை சார்ந்திருக்கும் தொண்டர்களுக்கும் பச்சை துரோகம் செய்து தி.மு.க.வின் வாக்குகளை டி.டி.வி.தினகரனுக்கு வாரி கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அகற்றிட வேண்டும், அவரது மக்கள் செல்வாக்கை தகர்த்து விடவேண்டும் என்று காலமெல்லாம் செயல்பட்ட தி.மு.க.வும், ஜெயலலிதாவுக்கு பச்சை துரோகம் இழைத்த டி.டி.வி.தினகரனும் ரகசிய கூட்டு சேர்ந்தது, தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, திருமங்கலம் பார்முலா என்ற புதிய சொல்லை தீய சக்தி தி.மு.க. உருவாக்கியது. அதேவழியில் இப்போது ஆர்.கே.நகரில் நூதனமுறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பார்முலா எனும் தீயசொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்த டி.டி.வி.தினகரன் குழுவினர், பிரசாரத்தின் கடைசி நாளில் 20 ரூபாய் நோட்டை வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு குறிவைத்து கொடுத்து வெற்றி பெற்றதும், அதற்கு ஈடாக ரூ.10 ஆயிரம் தரப்படும் என்று மக்களை நம்பவைத்து பிரசாரம் செய்தும், மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தீராத பழியை தன்மேல் கொண்டுள்ள தினகரனும், ஊழல் பழியை தனது தலைமேல் தாங்கி கொண்டிருக்கும் தி.மு.க.வும், ரகசிய ஒப்பந்தம் செய்து பெற்ற இந்த வெற்றியை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த சட்டசபை தொகுதிக்கும் சற்றும் பொருந்தாது.

தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் கூட்டு சதி செய்து, மக்களை ஏமாற்றி பெற்றுள்ள இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது. 1½ கோடி தொண்டர்களும் ஒரே சிந்தனையுடன் எம்.ஜி.ஆரின் வழிநடந்து, ஜெயலலிதாவின் புகழ்காத்து, தமிழக மக்களின் நலன்காக்க ஓர் உருவாய் செயல்படுவோம் என்று பணியாற்றும் கட்சி தொண்டர்களை பிளவுபடுத்தவோ, அ.தி.மு.க.வை யாரும் அசைத்துவிடவோ முடியாது.

தமிழக மக்களுக்காகவும், தமிழக நலனுக்காகவும் ஜெயலலிதா உருவாக்கி தந்த ஆட்சியை சிறப்புடன் வழி நடத்தி, அவரின் திட்டங்களை தொடர்ந்து செயலாற்றி அவரின் பெருமை சேர்க்க உளமார பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

இதே வகையில் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளும், செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் நம்முன் நிற்கின்றன. அந்த பணிகளை தொய்வின்றி செயல்படுத்தி ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்ப்போம்.

ஜெயலலிதாவின் எண்ணங்கள் ஈடேற, அவரது சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றிட, அவரின் நோக்கங்கள் அழியாது என்றும் வெற்றி பெற்றிட தொடர்ந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story