தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து


தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 8 April 2018 3:15 AM IST (Updated: 8 April 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று முத்திரை பதித்தார். அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:- காமன்வெல்த் பளுதூக்கும் பிரிவில் 2-வது முறையாக தங்கம் வென்று தாய்த் தமிழ்நாட்டுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை தேடித்தந்துள்ள வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்தை வாழ்த்தி மகிழ்கிறேன். ஒலிம்பிக்கில் தங்கம்வெல்ல வேண்டும் என்ற அவரது கனவு மெய்ப்பட அன்பான நல்வாழ்த்துகள்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெறுகின்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் 2-வது முறையாக தங்கப்பதக்கம் சென்று சாதனை படைத்துள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். ம.தி.மு.க. சார்பில் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:- காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கும் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு என் வாழ்த்துகள். வெற்றிகள் பல தொடரட்டும்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் எடைத் தூக்கும் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆகஸ்டு மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் மேலும் பல தங்கப்பதக்கங்களை வென்று உலக சாதனைகளைப் படைக்க அவரை வாழ்த்துகிறேன்.

கவிஞர் வைரமுத்து:- காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழனுக்கு வாழ்த்துகள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன்:- தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆடவர் பிரிவில் 317 கிலோ பளுவை தூக்கி தங்கம் சென்று சாதனை படைத்துள்ளார். இந்திய திருநாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து தந்த சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்கும் போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் சென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை வேலூர் மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்க்க கூடியதாகும். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேபோல், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமனும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Next Story