தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2018 5:30 AM IST (Updated: 8 April 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

இதில் இந்தியாவின் சார்பில் 218 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

முதல் நாளில் பளுதூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (மணிப்பூர்) தங்கப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் பி.குருராஜா (கர்நாடகம்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

2-வது நாளான நேற்று முன்தினம் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு (மணிப்பூர்) தங்கமும், ஆண்கள் பிரிவில் தீபக் லாதர் (அரியானா) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இந்த நிலையில், 3-வது நாளான நேற்று பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 77 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற இவர் ஸ்னாட்ச் முறையில் 144 கிலோவும், கிளன் மற்றும் ஜெர்க் முறையில் 173 கிலோவும் என மொத்தம் 317 கிலோ தூக்கி அசத்தினார்.

26 வயதான சதீஷ்குமார் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்வது இது 2-வது முறை ஆகும். இவர் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இதே பிரிவில் தங்கம் வென்றார். இப்போது மீண்டும் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

சதீஷ்குமார் வேலூரைச் சேர்ந்தவர். அங்குள்ள சத்துவாச்சாரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ள சதீஷ்குமாருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர் கள் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள சதீஷ்குமார் தொடர்ச்சியாக இரு முறை, அதாவது 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இப்போது கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெறும் போட்டியிலும் தங்கம் வென்று வரலாற்றில் இடம்பெற்று உள்ளார் என்று கூறி உள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் பங்கு கொண்டுள்ள நமது வீரர்-வீராங்கனைகள், பதக்க பட்டியலில் இந்தியாவின் நிலையை உயர்த்தி வருகிறார்கள் என்றும், அந்த செய்தியில் பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார்.

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் சதீஷ்குமாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், “21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமை அடையச் செய்துவிட்டீர்கள். இந்த அற்புதமான சாதனைக்காக தமிழக மக்கள் சார்பிலும், அரசின் சார்பிலும் இதயப்பூர்வமாக உங்களை வாழ்த்துகிறேன்” என்று கூறி உள்ளார்.

மேலும், இந்த பரிசுத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு சதீஷ்குமாருக்கு தகுதி உள்ளது என்றும், பளுதூக்கும் விளையாட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்குவதற்காக, பளுதூக்கும் சிறப்பு விளையாட்டு மையத்தை வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் தமிழக அரசு கட்டி இருப்பதையும் தனது கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

அதில், “இரண்டாம் முறையாக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றிருக்கும் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துகள். அவருக்கு தேவையான உதவிகளை வெற்றி பெறுவதற்கு முன்னரே மாநில அரசு செய்திருக்க வேண்டும். நமது அணி இது போன்ற வெற்றிகளை குவித்திட உதவிகள் செய்வது நம் கடமை” என்று கூறி உள்ளார்.

சதீஷ்குமார் சென்னை ராயபுரத்தில் ரெயில்வே அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே. குல்ஷ்ரேஸ்தா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றதை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் அவரது தந்தை சிவலிங்கம், தாயார் தெய்வானை, தம்பி பிரதீப்குமார் மற்றும் உறவினர்கள் டி.வி.யில் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சதீஷ்குமாரின் வெற்றியை அவர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்கள்.

சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவர்களுக்கு சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் இனிப்புகள் வழங்கினார்.

சதீஷ்குமாரின் பெற்றோருக்கு அப்பகுதி பொதுமக்கள், உறவினர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் கூறியதாவது.

காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் 2-வது முறையாக தங்கப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோல் அவர் பல பதக்கங் களை வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தேசிய பளுதூக்கும் மையத்தில் சதீஷ்குமார் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த மாதம் ஒருநாள் மட்டும் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது கால்வலியால் அவதிப்படுவதாக கூறினார். தற்போது கால் வலியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். சதீஷ்குமாரின் தந்தை, தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.


Next Story