தமிழகத்தில் போராட்டம் தீவிரம்; சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டி இடமாற்றம் செய்யப்படுகிறது?
தமிழகத்தில் போட்ட்டங்கள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டியை இடமாற்றம் செய்ய ஆலோசிக்கப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது. #IPL #Cauvery
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனை போராட்டக்களமாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
போராட்டம் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சினிமா இயக்குனர்கள் கோரிக்கையும் விடுத்தனர். நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், காவிரி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும். ஐபிஎல் போட்டியை காண செல்லும் ரசிகர்களும், கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும் என்றார். அரசியல் கட்சிகள் தரப்பிலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் சென்னையில் 10-ம் தேதி நடைபெற இருந்த போட்டியை இடமாற்றம் செய்ய ஆலோசிக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக கிரிக்கெட் வாரியம் மற்றும் கேரள கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது எனவும் போட்டியை சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி சென்னையில் போட்டி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story