ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வலியுறுத்தி 8 கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Sterlite #SterliteProtest
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் தங்களது கிராமத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அவர்களது போராட்டத் திற்கு தினமும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிர மடைந்தது.
அ.குமரெட்டியாபுரம் கிராமமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள மற்ற கிராமங்களான பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
மேலும் தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்களும் நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தூத்துக்குடியில் தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மொத்தம் 8 இடங்களில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 57 வது நாளாக போராட்டம் தொடருகிறது
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் மகளிர் கல்லூரிகளின், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி கோர்ட்டு வக்கீல்கள் கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இன்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு பேரணியாக சென்று, அங்கு இன்று 57-வது நாளாக நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி திருச்செந்தூர் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 8 கிராம மக்கள் போராட்டம். நடத்தினர்.
Related Tags :
Next Story