அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் 3 ஆயிரத்து 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 900 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த (மார்ச்) மாதம் 16-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. அந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது.
இந்த வருடம் முதல் முதலாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த (மார்ச்) மாதம் 7-ந்தேதி முதல் தேர்வு தொடங்கியது. தேர்வு வருகிற 16-ந்தேதி முடிவடைகிறது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20-ந்தேதி பள்ளிக்கூட இறுதி வேலை நாட்களாகும். இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.
தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 32 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு 19-ந்தேதிதான் இந்த கல்வி ஆண்டில் இறுதி வேலைநாள். 20-ந்தேதி முதல் இந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்படுகின்றன.
ஏப்ரல் மாதம் இறுதி நாள் வரை தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்படும். இந்த வருடம் தான் முதல் முதலாக ஏப்ரல் 19-ந்தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
வருகிற கல்வி (2018-2019) ஆண்டில் 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்த கோடை விடுமுறை நாட்களிலா, அல்லது கோடை விடுமுறை முடிந்தா? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story