‘நாளை நடைபெறும் முழு அடைப்பை அமைதியாக நடத்தி வெற்றிபெறச் செய்யுங்கள்’ அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை அமைதியாக நடத்தி வெற்றிபெறச் செய்ய டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு வலியுறுத்தியும் காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் 11-ந் தேதி (நாளை) முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், ஏராளமான அமைப்புகளும் ஆதரவு அளித்திருப்பது மிகுந்த மனநிறைவளிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டம் காவிரி பாசனப் பகுதிகளுக்கு மட்டுமான போராட்டம் அல்ல. அது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான போராட்டம் என்பதையும், இது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. நமது உணவுப் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கான போராட்டம் என்பது குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் கைகோர்ப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
விவசாயிகள் நலன்களை பாதுகாப்பதற்கான உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இப்போராட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும், தொல்லையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். போராட்டத்தின் போது சிறு அசம்பாவிதமோ, வன்முறையோ நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாட்டாளிகளின் ஆதரவுடன் நடத்தப்படும் போராட்டம் மாபெரும் வெற்றி என்ற செய்தி டெல்லியின் செவிகளை எட்ட வேண்டும்; தமிழக மக்களின் எழுச்சிக்கு பணிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கேற்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவுடன் 11-ந் தேதி (நாளை) நடைபெறவுள்ள முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தத்தை அமைதியாக நடத்தி வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story