ஆவின் பால் கலப்பட வழக்கில் இருந்து லாரி உரிமையாளர் வைத்தியநாதன் உள்பட 3 பேர் விடுவிப்பு
ஆவின் பால் கலப்பட வழக்கில் இருந்து டேங்கர் லாரி உரிமையாளர் வைத்தியநாதன், அவரது மனைவி உள்பட 3 பேரை விடுவித்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு டேங்கர் லாரியில் கொண்டு வரப்படும் பாலைத்திருடி அதற்குப் பதிலாக தண்ணீர் கலந்து கலப்படம் செய்ததாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபட்டி போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார், பாலில் தண்ணீர் கலந்ததாக லாரி உரிமையாளரான சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வைத்தியநாதனை கைது செய்தனர். இந்த கலப்பட வழக்கில் வைத்தியநாதன் உள்பட 23 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.
விடுவிக்க மறுப்பு
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார், விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து குற்றப்பத்திரிகையில் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இல்லை என்றும், அதனால் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி, அப்துல்ரஹீம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த விழுப்புரம் கோர்ட்டு, 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து உத்தரவிட்டது.
விடுவிப்பு
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஆவின் பாலில் கலப்படம் நடந்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் சரியாக தாக்கல் செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்ட முக்கியமான சிலரை இந்த வழக்கில் இருந்து கீழ் கோர்ட்டு ஏற்கனவே விடுவித்துள்ளது.
எனவே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே மனுதாரர்கள் 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிடுகிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story