வீட்டு வாடகைக்காக சிறுவனிடம் செல்போனை பிடுங்கி கிணற்றில் தள்ளிவிட்டு கொலை
வீட்டு வாடகைக்காக சிறுவனிடம் செல்போனை பிடுங்கி கிணற்றில் தள்ளிவிட்டு கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அழகாபுரி 2-வது தெருவைச் சேர்ந்த சங்கர் கூலித்தொழிலாளி . இவரது மனைவி வினோதினி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தையான கிஷோர்குமார் (வயது 8) உமர்ரோட்டில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 5-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற திரும்பிய கிஷோர்குமார் வீட்டில் தனது புத்தகப்பையை வைத்துவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். வெகுநேரம் ஆகியும் கிஷோர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியிருக்கின்றனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கிஷோரின் தந்தை சங்கர், நகர காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம்பூர் அருகே உள்ள பெங்களூர்- சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து தூர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றை எட்டிப் பார்த்திருக்கின்றனர். அப்போது கிணற்றில் சிறுவன் ஒருவனின் சடலம் மிதந்தது தெரியவந்தது. இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். சடலமாக இருந்தது கடந்த 05.04.2018 (வியாழக்கிழமை) அன்று காணாமல் போன சிறுவன் கிஷோர்குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வாடகை பணம் 2,000 ரூபாயை கட்ட அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சிறுவனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜா என்பவரின் மகன் விக்னேஷ். வயது 20. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் அதே பகுதியில் வாடகை வீடு ஒன்றில் குடியிருந்து வந்தனர். இந்த மாத வாடகையை குறிப்பிட்ட நாளில் கட்ட பணம் இல்லாமல் என்ன செய்வது என்று தவித்திருக்கிறார் விக்னேஷ். அந்த நேரத்தில் சிறுவன் கிஷோர் கையில் செல்போனுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டிருக்கிறார். இதனையடுத்து சிறுவன் கிஷோரை நைசாக பேசி அழைத்துச் சென்ற விக்னேஷ், அவன் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கியிருக்கிறார்.
இது வெளியில் தெரியாமல் இருக்க சிறுவனை அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். பின்னர் பறித்துச் சென்ற செல்போனை தனது நண்பனிடம் கொடுத்து வீட்டு வாடகைக்காக அவசரமாக தனக்கு இரண்டாயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் செல்போனை வைத்துக்கொண்டு பணத்தை தரும்படி கேட்டுள்ளார் விக்னேஷ். நண்பரும் பணத்தை கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சிறுவன் கையில் வைத்திருந்த செல்போன் மூலமே அவர் கொலை செய்யப்பட்டதற்கான தடயம் போலீசாருக்கு சிக்கியிருக்கிறது.
பாழடைந்த கிணற்றிலிருந்து மாணவனின் சடலத்தை மீட்டெடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில், கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். வாடகை பணத்திற்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story