ஆலை உரிமத்தை புதுப்பிக்க கோரி விண்ணப்பித்த மனு நிராகரிப்பு: ஸ்டெர்லைட் நிர்வாகம்
ஆலை உரிமத்தை புதுப்பிக்க கோரி விண்ணப்பித்த மனு நிராகரிக்கப்பட்டு உள்ளதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறி உள்ளது. #Sterliteprotest
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டனர்.
இதற்கான பணிகள் நடந்து வந்தது. இதற்கு தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீர் மாசுப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அருகில் உள்ள பண்டாரம் பட்டி, சில்வர்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தபால்தந்தி காலனி, 3&வது மைல், முருகேசநகர், கோரம்பள்ளம் ஆகிய 10 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள மில்லர்புரம், சிலோன்காலனி பகுதி பொதுமக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று இரவு முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மொத்தம் 12 இடங்களில் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளார்கள்.
அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்து வரும் தொடர் போராட்டம் இன்று 58-வது நாளை எட்டியது. அங்குள்ள மரத்தடியில் பொதுமக்கள் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பராமரிப்பு பணிகளை மேலும் நீட்டித்தது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படுவது மேலும் தாமதம் ஆகும் என கூறப்படுகிறது .
Related Tags :
Next Story