தமிழக அரசு இனியும் எடுபிடியாக இல்லாமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் -டிடிவி தினகரன்


தமிழக அரசு இனியும் எடுபிடியாக இல்லாமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் -டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 10 April 2018 1:40 PM IST (Updated: 10 April 2018 1:40 PM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சேலம் ஆர்ப்பாட்டத்தில் தினகரன் பேசினார். #TTVDhinakaran #CauveryIssue

சேலம்

காவிரிக்காக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை எள்ளி நகையாடும் தமிழக பாஜக தலைவர்களின் செயல் சரியானது அல்ல என்று சேலத்தில் நடந்த போராட்டத்தில் டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார்.

இதில் பேசிய டி.டி.வி தினகரன், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தொடர்ந்து ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய, மாணவர் அமைப்புகளும் போராடி வருகின்றன.

மக்களின் தொடர் அழுத்தம் தாங்க முடியாமல், மத்திய அரசின் எடுபிடியாக இருக்கும் தமிழக அரசு கூட பெயரளவில் ஒரு உண்ணாவிரதத்தை நடத்தியது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு இனியும் எடுபிடியாக இல்லாமல் பதவி போனாலும் பரவாயில்லை என்று மத்திய அரசுக்கு பயப்படாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும்

ஆனால், தமிழக பாஜக தலைவர்கள் மட்டும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை அரசியல் நோக்கத்தைக் கொண்ட நாடகங்கள் என்றும், இந்த போராட்டங்களால் ஒரு பயனும் இல்லை என்றும் எள்ளி நகையாடி வருகிறார்கள். அவர்களின் இந்தப் போக்கு சரியானது அல்ல.

கர்நாடக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்தே மத்திய பாஜக அரசு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து காலம் தாழ்த்தி தமிழக மக்களையும், விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறது என கூறினார்.

Next Story