சென்னை அருகே ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடக்கம்
சென்னை அருகே ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடங்குகிறது.
சென்னை,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் சுமார் ரூ.800 கோடியில், 10-வது ராணுவ தளவாட கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதுவரை நமது நாட்டில் நடத்தப்பட்டு வந்து உள்ள ராணுவ தளவாட கண்காட்சிகளில் எல்லாம் மிகப்பெரிய கண்காட்சி இதுதான் என்பது மைல் கல்லாக அமைந்து உள்ளது.
பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்
இந்த கண்காட்சி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் 6 வர்த்தக கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
ஆனால் இதன் அதிகாரபூர்வ தொடக்க விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ தளவாட கண்கட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
பிரதமர் மோடி முன்னிலையில் முப்படைகளின் தளவாடங்களது செய்முறை விளக்கங்கள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்துவதாக அமையும். இது வர்த்தக ரீதியிலான பார்வையாளர்களுக்கானது.
பொதுமக்கள் பார்வையிட....
கண்காட்சியின் மூன்றாவது நாளில் (13-ந் தேதி), இந்திய-ரஷிய ராணுவ தொழில் துறை மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் 200 தொழில் அதிபர்களும், ரஷியாவின் தரப்பில் 100 தொழில் அதிபர்களும் கலந்து கொள்வார்கள்.
4-வது நாள் (14-ந் தேதி) பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்கு ராணுவ தளவாட கண்காட்சி இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான ஒப்புகை சீட்டை கொண்டு, கண்காட்சி நடைபெறும் இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
50 நாடுகள்
இந்த கண்காட்சியில் பங்கேற்பதாக 50-க்கும் மேற்பட்ட நாடுகள், 700-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பதிவு செய்து உள்ளனர்.
இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம், நமது நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி திறனையும், ராக்கெட் உற்பத்தி திறனையும் உலகுக்கு பறை சாற்றுவதாக அமையும்.
முற்றிலும் நமது நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
நீர்மூழ்கிக்கப்பல்கள், வழித்துணை கப்பல்கள் கட்டும் திறனிலும் நமது நாடு சளைத்தது அல்ல என்பது இந்த கண்காட்சியின் மூலம் உலக நாடுகளுக்கு தெரிய வரும்.
சாகச காட்சிகள்
இந்த கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையவிருப்பது செய்முறை விளக்க காட்சிகள் ஆகும்.
போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் நடத்துகிற சாகச காட்சிகள் மயிர் கூச்செறிவதாக அமையும்,
இந்த கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் 13-ந் தேதியும், 15-ந் தேதியும் நிறுத்தி வைக்கப்படும். அவற்றினுள் ஏறி பார்க்கவும் அனுமதிக்கப்படும்.
ராணுவ தளவாட கண்காட்சி, பேஸ் புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story