ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி மறுப்பு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது


ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி மறுப்பு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது
x
தினத்தந்தி 11 April 2018 5:33 AM IST (Updated: 11 April 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை உரிமத்தை புதுப்பிக்க மாசு கட்டுபாட்டு வாரியம் மறுத்துள்ளது. இதனால் ஆலையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

சென்னை, 

தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். “ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக்கூடாது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று தொடர்ந்து அப்பகுதி மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நேற்று 59-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த தொடர் போராட்டங்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் 1974-1981-ன் கீழ் தடையில்லா சான்றிதழை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்தது. இந்த தடையில்லா சான்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி புதுப்பித்து வழங்கப்பட்டது. கடந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதியுடன் இந்த தடையில்லா சான்றின் காலம் முடிவடைந்தது.

ஆனால், 2 மாதத்திற்கு முன்பாகவே தடையில்லா சான்றை மீண்டும் புதுப்பித்து தர மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. அதே நேரத்தில், ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கியதால், அனுமதி வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயங்கியது.

இந்த நிலையில், தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரசாந்த் ஸ்டெர்லைட் ஆலையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அது தொடர்பாக அறிக்கை தயாரித்து அரசுக்கும் அளித்தார். இதற்கிடையே, மார்ச் 29-ந் தேதி திடீரென ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. பராமரிப்பு பணி காரணமாக 15 நாட்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது.

தடையில்லா சான்றை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்கினால் மட்டுமே 15 நாட்களுக்கு பிறகு தாமிர உற்பத்தியை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் வழங்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிப்காட் நிர்வாகத்துக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆலை உரிமத்தை புதுப்பித்து தரக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிய மனுவை மாசுகட்டுபாட்டு வாரியம் ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஆலையில் தாமிர உற்பத்தி தொடர்பாகவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களை அளிக்குமாறும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சார்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு 1-ஐ 31-3-2018-க்கு பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது.

அவ்விண்ணப்பத்தை பரிசீலித்தபோது, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை, அக்குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் 9-4-2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக மேலும் 15 நாட்கள் மூடப்படும் என்று நேற்று ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், போராட்டம் நடத்திவரும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தொடர்ந்து அனுமதி இல்லை என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி அளிக்கவில்லை என்றும் வந்துள்ள செய்தி குமரெட்டியாபுரம் களம் அமைத்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்கிறேன். ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் விருப்பமும், எனது நிலைப்பாடும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பலவகை போராட்டத்தின் பலனாக, ஆலையை தொடர்ந்து இயக்கவும், புதுப்பிக்கவும் கோரிய வேதாந்தா குழுவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அப்பகுதி மக்களின் அமைதி போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன். இது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், மக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லாத, சுகாதார சீர்கேட்டினை விளைவிக்கக்கூடிய ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடிட உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story