பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட நினைப்பது சரியல்ல டி.டி.வி.தினகரன் பேட்டி
சென்னைக்கு வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட நினைப்பது சரியல்ல என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
சேலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும், உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதனையடுத்து டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையின்போது கருப்புக்கொடி காட்ட நினைப்பது சரியாக இருக்காது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் போராடினார்கள். அதனால் தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது. அதேபோல் 8 கோடி மக்களின் ஜீவாதார பிரச்சினை காவிரிநீர் என்பதால் ஐ.பி.எல். கிரிக்கெட்டை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
அப்போது தான் இங்கு நடக்கும் பிரச்சினை உலக அளவில் தெரியும். இதன் மூலம் காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருப்பதால் 16-ந் தேதி நாமக்கல்லில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் 20-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு விரைவில் வரும். அதில் நிச்சயம் நீதி வெல்லும்.
காவிரி பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக பா.ஜனதாவும் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் மிரட்டி வருவது சரியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story