ரஷியா போன்று இந்தியாவிலும் மாநிலங்கள் தனி நாடுகள் ஆகும் நிலை வரும் வைகோ எச்சரிக்கை


ரஷியா போன்று இந்தியாவிலும் மாநிலங்கள் தனி நாடுகள் ஆகும் நிலை வரும் வைகோ எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 April 2018 2:57 AM IST (Updated: 12 April 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

ரஷியா போன்று இந்தியாவிலும் மாநிலங்கள் தனி நாடுகள் ஆகும் நிலை வரும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்தார்.

ஆலந்தூர், 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி மதுரையில் மார்ச் 31-ந் தேதி தொடங்கிய நடைபயணத்தை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்பு தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு மக்களிடம் எளிதாக சென்று அடைந்தது.

இந்தியாவில் உள்ள 22 அணுஉலைகளில் உள்ள அணுகழிவுகள் இங்கு கொட்டப்படும். நியூட்ரினோவால் கேரளா, தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களிலும் உள்ள 18 அணைகள் உடையும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டிலும் சென்று வாதாடுவேன்.

நான் விளையாட்டுக்கு எதிரானவன் அல்ல. நான் ஒரு விளையாட்டு வீரர். கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களை குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் தமிழகமே கொந்தளிக்கும்போது இது தேவையா. கடந்த 2 ஆண்டுகளாக நடந்ததா?.

விளையாட்டு போட்டியை நடத்தாவிட்டால் என்ன குடிமூழ்கிவிடுமா? தமிழகத்தில் போராட்டம் கிடையாது என்ற நிலை ஏற்படாதா?. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டம் தமிழக மக்களின் எண்ணங்களை உலகத்திற்கு எடுத்து காட்டி இருக்கிறது. போராட்டத்தில் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.

தென் மாநிலங்களுக்கு வஞ்சகம் செய்கின்ற வகையில் 15-வது நிதி கமிஷன் செயல்பட்டதை கண்டித்து கேரள மாநில முதல்-மந்திரி, தென்மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டினார். ஆந்திர நிதிமந்திரி அதில் கலந்து கொண்டார். நிதிகமிஷன் தங்களை ஏமாற்றிவிட்டதாக முதல்-அமைச்சர் அறிக்கைவிட்டார். ஆனால் அந்த கூட்டத்துக்கு செல்லாதது ஏன்?.

ஆந்திராவில் நடக்கும் கூட்டத்திலாவது கலந்துகொள்ள வேண்டும். மோடி என்ன நினைப்பாரோ? என பயந்து கிடக்காதீர்கள். ,

பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். எல்லா வீடுகளிலும் கருப்பு கொடி ஏந்தவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார். கட்சியினர் மட்டுமின்றி தமிழ் உணர்வு உள்ளவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்லுங்கள். எல்லா இடங்களிலும் எதிர்ப்பை காட்ட வேண்டும்.

தமிழகத்தில் அறவழியில் அமைதியாக போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். ரஷியாவில் மாநிலங்கள் தனித்தனி நாடுகளாக மாறிய நிலை போன்று இங்கும் ஏற்படப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story