சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு


சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு
x
தினத்தந்தி 12 April 2018 3:55 AM IST (Updated: 12 April 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை,

சென்னை, போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காணாமல் போனார்.

இதுகுறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்தது தெரியவந்தது.

தூக்கு தண்டனை

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்ய, இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, இந்த தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

குளறுபடிகள்

அந்த மேல்முறையீட்டு மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்கள், விசாரணை நீதிமன்றத்தில் சட்டப்படி நிரூபிக்கவில்லை. இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சிகளின் சாட்சியத்தில் பல குளறுபடிகள் உள்ளன.

அந்த சாட்சிகள், நான் தான் குற்றச்செயலை செய்தேன் என்று நேரடியாக கூறவில்லை. இதை கீழ் கோர்ட்டு நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். கடைசியாக ஹாசினி, இவருடன் தான் இருந்தார் என்ற அடிப்படையில், அந்த சிறுமியை நான் தான் கொலை செய்தேன் என்று கீழ் கோர்ட்டு நீதிபதி முடிவுக்கு வந்திருப்பது சட்டப்படி ஏற்க முடியாது.

முரண்பாடுகள்

குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், சிறுமி கடைசியாக அணிந்திருந்த ஆடைகளையும் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்யவில்லை. இதை கீழ் கோர்ட்டு நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார்.

போலீஸ் தரப்பில் முதல் மற்றும் இரண்டாம் சாட்சிகள், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்துக்கும், கோர்ட்டில் சொன்ன சாட்சியத்துக்கும் பல முரண்பாடுகள் உள்ளன. எனவே, இந்த வழக்கில் எனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவேண்டும். என்னை விடுதலை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நோட்டீஸ்

இந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story