ரெயில் என்ஜின் மீது ஏறிய பா.ம.க. நிர்வாகி மீது மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
திண்டிவனத்தில் ரெயில் மறியல் போராட்டத்தின்போது, என்ஜின் மீது ஏறிய பா.ம.க. இளைஞரணி துணைச் செயலாளர் மீது மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியது.
திண்டிவனம்,
அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் 11-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. திண்டிவனத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
ரெயில் மறியல்
இந்தநிலையில், காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக பா.ம.க. மாநில துணைத்தலைவர் ஏழுமலை தலைமையில் ரெயில் நிலையம் முன்பு அந்த கட்சியினர் திரண்டிருந்தனர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.
அப்போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் திண்டிவனம் ரெயில் நிலையத்துக்குள் 10.35 மணிக்கு வந்து நின்றது. உடனே பா.ம.க.வினர் அனைவரும் ஓடி வந்து ரெயிலை மறித்தனர். சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி வந்த தொண்டர்கள் சிலர் ரெயில் என்ஜினில் முன்பக்கமாக ஏற முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, என்ஜின் மீது ஏறக்கூடாது என்று எச்சரித்தனர்.
மின்சாரம் பாய்ந்தது
இந்த சூழ்நிலையில் திண்டிவனம் நகர பா.ம.க. இளைஞர் அணி துணைச் செயலாளரான திண்டிவனம் அய்யன்தோப்பு காமராஜர் நகரை சேர்ந்த ரங்கநாதன் மகன் ரஞ்சித்குமார்(வயது 34) உள்பட 2 பேர் என்ஜினின் பின்பக்கமாக ஏறினர்.
மின்சார ரெயில் இயங்குவதற்காக பயன்படும் உயர் மின்அழுத்தம் கொண்ட மின்கம்பி தலைக்கு மேல் செல்வது தெரியாமல் அவர்கள் 2 பேரும் என்ஜினின் முன்பக்கத்தை நோக்கி கைகளை தூக்கி கோஷமிட்டபடி ஓடி வந்தனர். இதில் 2-வதாக வந்த ரஞ்சித்குமார், கையை தூக்கியபோது அவர் மீது உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடலில் குபீரென்று தீ பற்றி எரிந்ததுடன், அவரை தூக்கி வீசியது. இதில் உடல் கருகிய நிலையில் அவர் ரெயில் என்ஜினிலேயே சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
தீவிர சிகிச்சை
உடனடியாக அங்கிருந்த போலீசார், ரஞ்சித்குமாரை மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2 குழந்தைகளின் தந்தை
மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த ரஞ்சித்குமாருக்கு சுதா(26) என்கிற மனைவியும், விகாசினி(8), பிரசன்னா(6) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். ரஞ்சித்குமார் திண்டிவனத்தில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story