காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பா.ம.க. சார்பில் முழுஅடைப்பு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பா.ம.க. சார்பில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி, காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு உழவர் பேரியக்கம் ஆகியவை சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மற்றும் அனைத்து விவசாய அமைப்புகளும், வணிகர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.
அப்போது டாக்டர் ராமதாஸ் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காவிரி தண்ணீர் விவசாயத்திற்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகள் 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இது தமிழர்களின் வாழ்வாகவும், வாழ்வுரிமையாகவும் உள்ளது’ என்றார்.
சேலத்தில் ரெயில் மறியல்
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அவர்களை நுழைவு வாயில் அருகே நின்ற போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் தண்டவாளம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் கடைகள் அடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து வியாபாரிகளும் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது. மேலும் மாவட்டத்தில் தனியார் பஸ்களும் ஓடவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து 7 இடங்களில் நடந்த ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 1017 பேர் கைது செய்யப்பட்டனர்.
என்.எல்.சி, சுரங்க அலுவலகம்...
நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. சுரங்க அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமையில் அனைத்துக் கட்சியினரும் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 210 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பஸ் கண்ணாடிகள் உடைப்பு
பா.ம.க. முழுஅடைப்பு போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் 10 பஸ்களின் கண்ணாடிகளை சிலர் கல்வீசி தாக்கினார்கள். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர். இந்த கல்வீச்சு சம்பத்தில் ஒரு பெண் உள்பட சில பயணிகள் காயம் அடைந்தனர். குடியாத்தம் பகுதியில் பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
செஞ்சி அருகே 2 அரசு பஸ்களின் கண்ணாடிகளை சிலர் கல்வீசி தாக்கினார்கள். இதில் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின.
கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு வந்த அரசு பஸ்சை முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இது தவிர மேலும் 3 பஸ்களின் கண்ணாடிகளையும் மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது.
ஈரோடு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி பகுதியில் ஆர்ப்பாட்டம்-கடையடைப்பு போராட்டங்கள் நடந்தது. ஈரோடு ரெயில் நிலையத்துக்குள் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அரசியல் கட்சியினர் விவசாய அமைப்பினர் புகுந்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
போலீசாரின் தடுப்பை மீறி ரெயில் நிலையத்துக்குள் புகுந்த சிலர் கோவை-நாகர்கோவில் ரெயில் என்ஜின் மீது ரெயில் மறியலில் ஈடுபட்டனர். ரெயில் மறியல் போராட்டம் தொடர்பாக மொத்தம் 430 பேர் கைதானார்கள்.
திருவண்ணாமலை-கடலூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்-சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி உள்பட 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 475 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 9 இடங்களில் நடந்த பஸ்-ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 81 பெண்கள் உள்பட 1457 பேர் கைதானார்கள். பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Related Tags :
Next Story