ராணுவ கண்காட்சியையொட்டி முப்படைகளின் சாகச நிகழ்ச்சி


ராணுவ கண்காட்சியையொட்டி முப்படைகளின் சாகச நிகழ்ச்சி
x
தினத்தந்தி 12 April 2018 5:30 AM IST (Updated: 12 April 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியையொட்டி, முப்படைகளின் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை,

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்பு துறையின் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற கண்காட்சி நேற்று தொடங்கியது. வரும் 14-ந் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையிலும், உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ராணுவ தளவாட உற்பத்திகளை அதிகரிப்பதுடன், சர்வதேச அளவில் அதனை தெரிவிக்கும் வகையிலும் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

ரூ.800 கோடி செலவில், 2.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் 701 பாதுகாப்பு துறை தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று இருக்கின்றன. 539 இந்திய நிறுவனங்களும், 162 வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்று உள்ளன.

முப்படைகளின் சாகச நிகழ்ச்சி

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இக்கண்காட்சி அரங்கில் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெல், பி.இ.எம்.எல். உள்ளிட்ட முக்கிய இந்திய நிறுவனங்களும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ரபேல், ஏர்பஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

அது மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா உள்ளிட்ட 47 நாடுகளின் அரசு பிரதிநிதிகள், பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இக்கண்காட்சியை முன்னிட்டு நடைபெற்ற முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகளை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி சுரேஷ் பாம்ரே மற்றும் முப்படையின் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்த கண்காட்சியின் போது நடைபெற்ற கருத்தரங்குகளில் வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடினர். தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த உதவும் நடவடிக்கைகள் தொடர்பான மலர் வெளியிடப்பட்டது.

இந்த கருத்தரங்கில் ஏர்பஸ் நிறுவனத் தலைவர், பியரி டி பாஷெப் பேசும்போது, உற்பத்தியை பொறுத்தமட்டில், அனைத்து பணிகளையுமே, நீங்களே செய்துவிட முடியும் என்று நினைப்பதில் சாத்தியம் இல்லை. அனைத்து பணிகளிலும், நன்மை தீமைகள் உள்ளன என்றார்.

தொடர்ந்து, கே.பி.எம்.ஜி. ஆலோசனை நிறுவன நிர்வாகி ஆம்பர் துபே பேசுகையில், உற்பத்தியை பொறுத்தவரையில் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கூறுவதை வரவேற்கிறோம். ஆனால், அரசை நெருங்கி வரும்போது, அதிக முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. குறிப்பாக, ஒப்பந்தங்கள் போடுவதில் காலதாமதம், காலக்கெடுவுக்குள் நிதி ஒதுக்காதது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற முட்டுக்கட்டைகளை எப்போது களையப்போகிறீர்கள். நாங்களும் இந்தியர்கள்தான். இந்தியாவிற்காக தான் நாங்களும் உழைக்கிறோம் என்றார்.

வர்த்தக பார்வையாளர்களை தொடர்ந்து, 14-ந் தேதி பொதுமக்களும் இக்கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த கண்காட்சியில் அமெரிக்கா சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் அந்த நாட்டின் ராணுவ தளவாடங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், பசிபிக் மண்டலத்தின் அமெரிக்க ராணுவ துணை கமாண்டிங் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரையன் சந்திமெர் ஆகியோர் தலைமையில் அந்நாட்டின் குழுவினர் பங்கேற்றனர்.

பின்னர் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், நிருபர்களிடம் கூறும்போது, “பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பெரும் கூட்டாளியாக அமெரிக்கா அடையாளப்படுத்தி இருப்பது, அமெரிக்கா-இந்தியா ஒத்துழைப்பில் ஒரு புதிய மைல் கல்லாகும். பாதுகாப்பு துறையில் இத்தகைய கூட்டாண்மை ஒத்துழைப்பையும், இந்திய பசிபிக் மண்டலத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தை அடிப்படையாக கொண்டு பரந்த செயல்நோக்கு உறவையும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரும் முன்னெடுத்து செல்கின்றனர்” என்றார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டு, ராணுவ தளவாட பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

ராணுவத்துக்கு தேவையான, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பல்வேறு தளவாடங்கள், இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, போர் நடக்கும்போது, அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில், கதிர்வீச்சு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும், என்.பி.சி. பீரங்கி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனம் முழுவதும், குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், 12 மணி நேரம், கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாமல், உள்ளே அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு ஆயுதங்களை தாங்கி, பாலைவனத்தில் எளிதாக செல்லக்கூடிய புதிய வாகனத்தை தயாரிக்கும் திட்டம் பாதுகாப்பு துறையில் உள்ளது. இதற்கான, வாகன மாதிரி காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தையும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஆராய்ச்சியின் பேரில், டாடா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. உள்நாட்டில் உற்பத்தியாகும் துப்பாக்கிகள், சிறப்பு அதிரடிப்படைக்கு தேவையான ஏகே 47 ரக துப்பாக்கிகள் பல்கேரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது இந்த துப்பாக்கிகள், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில், டார் (ஜிகிஸி) துப்பாக்கிகள், நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு வழங்கி வருவதாக துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிந்துஜா குழுமத்தின் பிரதான நிறுவனமான அசோக் லேலண்டு இந்திய ராணுவத்திற்கு போக்குவரத்து தொடர்பான வாகனங்களை அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது. சென்னையில் நடைபெற்று வரும் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் 6 அதிநவீன தயாரிப்புகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளையும் காட்சிக்கு வைத்துள்ளது.

இந்த தயாரிப்புகளை சேனா பதக்கமும், வீர் சக்ரா விருதை வென்றவருமான மறைந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கொப்பாட் மனைவி மகாதேவி பிலேபால், கவுரவ கேப்டன் ரகுநாத் சிங் அறிமுகம் செய்து வைத்தனர்.

கண்காட்சியை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின் மற்றும் மாநில அதிகாரிகள் பார்வையிட்டனர். அதேபோன்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ராணுவ உடையில் வந்து கண்காட்சியை பார்வையிட்டார். 

Next Story