தண்டவாளத்தில் குண்டு வெடித்தது கோவை பயணிகள் ரெயிலை கவிழ்க்க சதி


தண்டவாளத்தில் குண்டு வெடித்தது கோவை பயணிகள் ரெயிலை கவிழ்க்க சதி
x
தினத்தந்தி 12 April 2018 5:00 AM IST (Updated: 12 April 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாளத்தில் குண்டு வைத்து கோவை பயணிகள் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது.

பொள்ளாச்சி,

மதுரையில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு புறப்பட்டது. ரெயிலில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த ரெயில் பகல் 12.10 மணி அளவில் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரெயில்வே கேட் அருகில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது தண்டவாளத்தில் குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதையடுத்து என்ஜின் டிரைவர் இளங்கோ ரெயிலை உடனடியாக நிறுத்தினார்.

பின்னர் அவர் கீழே இறங்கி வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் சிறு சிறு உருண்டைகளாக வெடிமருந்துகள் சிதறி கிடந்தன.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தண்டவாள பகுதியில் சோதனை செய்யப்பட்டது.

தண்டவாளத்தில் கிடந்தவை சல்பர், பாஸ்பரஸ் ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்பட்ட சிறிய ரக வெடிகுண்டு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எனவே மத்திய அரசை கண்டிக்கும் விதமாக தண்டவாளத்தில் வெடி வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பொள்ளாச்சி காந்தி சிலை, பஸ் நிலையம், பத்ரகாளியம்மன் கோவில் ரெயில்வே கேட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

Next Story