ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி 2000-த்திற்கும் மேற்பட்ட ஆலை ஊழியர்கள் தர்ணா போராட்டம்


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி 2000-த்திற்கும் மேற்பட்ட ஆலை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 12 April 2018 11:23 AM IST (Updated: 12 April 2018 11:23 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி 2000-த்திற்கும் மேற்பட்ட ஆலை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். “ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக்கூடாது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று தொடர்ந்து அப்பகுதி மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  பொதுமக்களின் இந்த தொடர் போராட்டங்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் 1974-1981-ன் கீழ் தடையில்லா சான்றிதழை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்தது. இந்த தடையில்லா சான்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி புதுப்பித்து வழங்கப்பட்டது. கடந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதியுடன் இந்த தடையில்லா சான்றின் காலம் முடிவடைந்தது. ஆனால், 2 மாதத்திற்கு முன்பாகவே தடையில்லா சான்றை மீண்டும் புதுப்பித்து தர மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. அதே நேரத்தில், ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கியதால், அனுமதி வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயங்கியது.

இந்த நிலையில், தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரசாந்த் ஸ்டெர்லைட் ஆலையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அது தொடர்பாக அறிக்கை தயாரித்து அரசுக்கும் அளித்தார். இதற்கிடையே, மார்ச் 29-ந் தேதி திடீரென ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. பராமரிப்பு பணி காரணமாக 15 நாட்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது.

தடையில்லா சான்றை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்கினால் மட்டுமே 15 நாட்களுக்கு பிறகு தாமிர உற்பத்தியை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் வழங்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிப்காட் நிர்வாகத்துக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆலை உரிமத்தை புதுப்பித்து தரக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிய மனுவை மாசுகட்டுபாட்டு வாரியம் ஏற்க மறுத்தது. 

மேலும், ஆலையில் தாமிர உற்பத்தி தொடர்பாகவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களை அளிக்குமாறும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி 2000-த்திற்கும் மேற்பட்ட ஆலை ஊழியர்கள் வளாகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story