பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3,070 பேர் கைது - சென்னை காவல் துறை
பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3,070 பேர் கைது செய்யப்பட்டனர் என சென்னை காவல்துறை கூறி உள்ளது. #PMModi #CauveryProtest #BlackFlag
சென்னை
காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகை தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
அதன் படி இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி போரட்டம் நடத்தினர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்
திருவிடந்தை நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை ஐ.ஐ.டி-க்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரதமர், அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். இதற்காக, ஐ.ஐ.டி-யிலிருந்து தரை மார்க்கமாக அடையாறு புற்று நோய் மையத்துக்குச் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையில் பிரதமர் மோடி இன்று காரில் சென்றபோது, ஐ.ஐ.டி மாணவர்கள் சிலர், 'காவிரி நீர் மேலாண்மை வாரியம் வேண்டும்' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர். மெக்கானிக்கல் சயின்ஸ் கட்டடம் முன் நின்று கோஷமிட்ட மாணவர்கள் கறுப்புச்சட்டை அணிந்திருந்தனர். கல்வி நிலையங்களை தனியார் மயமாக்கும் வகையில் திட்டங்களை வகுப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்.
சென்னையில் பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3,070 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்தி வெளியிட்டு உள்ளது.
சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி.
Related Tags :
Next Story