அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மன்ற நிர்வாகிகளுடன், ரஜினிகாந்த் ஆலோசனை


அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மன்ற நிர்வாகிகளுடன், ரஜினிகாந்த் ஆலோசனை
x
தினத்தந்தி 13 April 2018 4:15 AM IST (Updated: 13 April 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த், நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர், ரஜினி நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக நடிகர் ரஜினிகாந்த் மாற்றினார். அதன் தொடர்ச்சியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் 5 கட்டங்களாக நடைபெற்று, நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் குறித்த தன்னுடைய கருத்துகளை அவ்வப்போது ஆணித்தரமாக தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று அவரை சந்தித்து பேசினார்.

அப்போது ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூமகாலிங்கமும் உடன் இருந்தார்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ராஜூ மகாலிங்கம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சென்றார். அவரை தொடர்ந்து பிற்பகல் 12.15 மணியளவில் நடிகர் ரஜினிகாந்தும் மண்டபத்துக்கு வந்தார்.

உள்ளே சென்ற அவர், ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கம், நிர்வாகி வி.எம்.சுதாகர் ஆகியோருடன் சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

Next Story