ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் தடுப்புகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest #Sterlite
தூத்துக்குடி,
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என கூறி, ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக அ.குமரெட்டியாபுரத்தில் பொதுமக்கள் 61-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி உள்ளிட்ட 12 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக ஆலை கடந்த 26-ந்தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. இதனிடையே அ.குமரெட்டியாபுரத்தில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை நேற்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி, கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகள் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.
இதையடுத்து மாணவர்கள் அங்குள்ள வி.வி.டி சிக்னல் பகுதியில் இருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட திட்டமிட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டார்கள். அதிரடிப்படை போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து இருந்தனர். தடுப்புகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாணவர்கள் பஸ்சில் ஏறி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.
Related Tags :
Next Story