தமிழக கட்டிட தொழிலாளியை கரம்பிடித்த கம்போடிய பெண்


தமிழக கட்டிட தொழிலாளியை கரம்பிடித்த கம்போடிய பெண்
x
தினத்தந்தி 14 April 2018 4:15 AM IST (Updated: 14 April 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியை கம்போடியா நாட்டு பெண் காதலித்து கரம்பிடித்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மகன் பார்த்திபன் (வயது 29), கட்டிட தொழிலாளி. இவர் சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். அந்த இடத்தின் அருகே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கம்போடியா நாட்டை சேர்ந்த தென்மாவோ (30) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

பார்த்திபன் அடிக்கடி சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று பொருட்கள் வாங்குவது வழக்கம். அப்போது இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து பார்த்திபன் தனது சொந்த ஊரான பூசாரிபட்டிக்கு தென்மாவோவை அழைத்துவந்தார்.

சொந்த ஊரில் திருமணம்

தனது காதல் குறித்து பார்த்திபன் பெற்றோரிடம் கூறினார். ஆரம்பத்தில் அவரது பெற்றோர் அந்த காதலை ஏற்க தயங்கினர். பின்னர் பார்த்திபன் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் செய்ததால் பெற்றோர் சம்மதித்தனர். இதற்கு தென்மாவோவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

தென்மாவோவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் பூசாரிபட்டிக்கு வந்தனர். கிராம மக்கள் முன்னிலையில் பார்த்திபன்-தென்மாவோ திருமணம் பூசாரிபட்டியில் நடந்தது. வெளிநாட்டு மருமகளை பூசாரிபட்டி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

Next Story