15-வது நிதிக்குழு பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்


15-வது நிதிக்குழு பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 April 2018 3:00 AM IST (Updated: 14 April 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய-மாநில அரசுகளுக்கிடையே வரி வருவாய் பகிர்வையும், தொகுப்பு நிதியில் இருந்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களின் அளவையும் தீர்மானிப்பதற்காகவே நிதிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நிதிக்குழு எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் மாநில அரசுகள் மீது நேரிடையாக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தற்போது ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மாநிலங்களவை பா.ஜ.க. உறுப்பினருமான என்.கே.சிங் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் 15-வது நிதிக்குழு, 2020-2025-ம் ஆண்டுகளுக்கான முடிவுகளை எடுக்கிற அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு முன்பிருந்த 14-வது நிதிக்குழுவைக் காட்டிலும், நோக்கத்திலும், செயல்பாடுகளிலும் நிறைய வேறுபாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இது தென்மாநில அரசுகளிடையே மிகப்பெரிய சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் ஒய்.வி.ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட 14-வது நிதிக்குழு மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. இதனால் 2015-16-ம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட மொத்த வரி வருவாயான ரூ.15 லட்சத்து 67 ஆயிரம் கோடியில் மாநிலங்களின் பங்காக ரூ.5 லட்சத்து 79 ஆயிரம் கோடி பெறுகிற நிலை ஏற்பட்டது.

இது மாநிலங்களின் பங்கை 2014-15-ம் ஆண்டைக் காட்டிலும் 51.55 சதவீதமாக உயர்ந்தது. இது மாநிலங்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் 15-வது நிதிக்குழு தென் மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

எனவே, நீண்டகாலமாக அரசமைப்புச் சட்டத்தின் 280-வது பிரிவின் கீழ் இதுவரை 14 நிதிக்குழுக்கள் மூலமாக பெற்று வந்த உரிமைகளை, வரி வருவாய்களை இழக்கிற வகையில் அமைந்துள்ள 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை செய்யுமாறு தமிழக அரசு இனியாவது உரிய அழுத்தம் கொடுத்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story