உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ‘பட்டப்படிப்பு கட்டாயம்’ என சட்டத்திருத்தம் கொண்டு வர மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
பட்டப்படிப்பு முடித்திருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த ராஜீவ்ராஜா, யுகவியாஸ், காஞ்சீபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணா, சிவகங்கையை சேர்ந்த ஆதிசிவம், ராமநாதபுரத்தை சேர்ந்த பவித்ரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நாங்கள் 5 பேரும் சட்டக்கல்லூரி மாணவர்கள். எல்லா துறைகளிலும் அடிப்படை கல்வித்தகுதி உள்ளது. ஆனால் உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வித்தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
தற்போதைய நவீன யுகத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் பெருகியுள்ளன. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் பசுமை வீடுகள் திட்டம், 100 நாள் வேலை திட்டம், சூரிய ஒளி தெரு விளக்கு, எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி திட்டப் பணிகள் உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் உரிய கல்வியறிவு பெறாததால், மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவது, பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது போன்றவற்றை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
சட்டத்திருத்தம் தேவை
அரியானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வியறிவில் முன்னிலையில் உள்ளது. ஆனால் அந்த மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கல்வித்தகுதி கட்டாயமாகும்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ளூர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கல்வித்தகுதி தேவை இல்லை. இந்த நிலையை மாற்றி, அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும், நிர்வாகத்திறனை அதிகரிக்கும் வகையிலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
நோட்டீஸ்
பின்னர் இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story