கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்


கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்
x
தினத்தந்தி 14 April 2018 5:00 AM IST (Updated: 14 April 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 2 நாட்களுக்கு சில இடங்களில் கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் கன்னியாகுமரி அருகே மாலத்தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாகவும், தமிழகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் சந்திப்பதன் காரணமாகவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதாவது 2 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும்.

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மற்றும் வட மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். எனவே, அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story