முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் பெற புதிய செயலி தெற்கு ரெயில்வேயில் இன்று முதல் அமல்
முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் பெற புதிய செயலி தெற்கு ரெயில்வே முழுவதும் இன்று(சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.
சென்னை,
இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான துறைகளில் காகிதத்தின் பயன்பாட்டை குறைத்து வருகின்றனர். அந்த வகையில் ரெயில்வே துறையில் காகித பயன்பாடு இல்லாத நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக டிக்கெட் முன்பதிவில் சில மாற்றங்கள் கொண்டுவர திட்டமிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதி ரெயில் நிலையங்களில் முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பெறுவதற்கான நடைமுறையை 2015-ம் ஆண்டு கொண்டுவந்தனர்.
இதற்கு ‘யு.டி.எஸ். ஆன் மொபைல்’ (செல்போனில் முன்பதிவில்லா டிக்கெட் வழங்கும் முறை) என்று பெயர் சூட்டப்பட்டது.
முதலில் சென்னை மற்றும் புறநகரில் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது அந்த திட்டம் வெற்றிகரமாக இருப்பதால் தெற்கு ரெயில்வே முழுவதும் இந்த நடைமுறையை இன்று(சனிக்கிழமை) முதல் அமல்படுத்த இருப்பதாக தெற்கு ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘யு.டி.எஸ். ஆன் மொபைல்’ (‘ UTS ON MOBILE ’) என்ற செயலியையும், ‘ஆர் வாலெட்’ (‘ R Wallet ’) என்ற செயலியையும் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆர் வாலெட்டில் இணையதள வங்கி இணைப்பை இணைத்தோ, பயணச்சீட்டு பதிவு அலுவலகத்துக்கு சென்று பணம் செலுத்தி வாலெட்டில் பணத்தை சேமித்தோ வைத்துக்கொள்ளலாம்.
யு.டி.எஸ். செயலி மூலம் தங்களுடைய பயண விவரத்தை தெரிவித்து, வாலெட்டில் இருந்து பணத்தை செலுத்தி முன்பதிவில்லா டிக்கெட்டை செல்போனில் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் கால் கடுக்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவை இருக்காது.
சம்பந்தப்பட்ட ரெயில் நிலையத்தில் இருந்து 25 மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் தான் இந்த செயலி மூலம் டிக்கெட்டை பெறமுடியும்.
ரெயில் நிலையத்தின் உள்ளேயோ அல்லது 5 கிலோ மீட்டருக்கு அப்பாலோ இருந்து டிக்கெட்டை பெற இயலாது.
Related Tags :
Next Story