காஞ்சிபுரம் : திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சி நிறைவு


காஞ்சிபுரம் : திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சி நிறைவு
x
தினத்தந்தி 14 April 2018 5:21 PM IST (Updated: 14 April 2018 5:21 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சி நிறைவு பெற்றது. #DEFEXPO2018 #DefenceExpo2018

காஞ்சிபுரம்,

இந்திய ராணுவம் தங்களுக்கு தேவையான பெரும்பாலான தளவாட பொருட் களை தயாரித்து வருகிறது. அத்துடன் நம் நாட்டில் உள்ள ஒரு சில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரித்து வழங்குகின்றன. அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த கண்காட்சி சென்னை- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில்  கடந்த புதன்கிழமை துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு கண்காட்சி நடத்துவதன் நோக்கம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் சார்பில் கருத்தரங்குகள் நடக்கிறது. முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தொடர்ந்து 12-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி முறைப்படி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அத்துடன் கண்காட்சி வளாகத்தில் நம்நாட்டுக்கான அரங்கையும் அவர் திறந்து வைத்து பேசினார். முப்படையினரின் அணிவகுப்பும், மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சிகளும் திருவிடந்தையில் உள்ள கடற்கரையில் நடைபெற்றது. 13-ந்தேதி இந்தியா-ரஷியா நாட்டு ராணுவ தொழில் துறை மாநாடு நடைபெற்றது. இதில் இரு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொழில் துறை நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

ராணுவ கண்காட்சியின் கடைசி நாளான இன்று  (14 ஆம்தேதி )பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. அடையாள அட்டை ஏதாவது ஒன்றை காண்பித்து கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட்டது. ராணுவ கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். அப்போது முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 4 நாட்களாக நடைபெற்ற ராணுவ கண்காட்சி இன்று நிறைவு பெற்றது. 


Next Story