அரசின் விளக்கத்தை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டம் சில சமூக விரோதிகளால் திசை திருப்பப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். #SterliteProtest
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி அ.குமரெட்டியபுரத்தில் 61–வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதே போன்று பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், மாதவன் நகர், கிராமங்களிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3–வது மைல், தபால் தந்தி காலனி, முருகேசன்நகர், சிலோன்காலனி ஆகிய இடங்களிலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாளையாபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சில்வர்புரத்தில் போராட்டம் நடத்துகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் சமூக விரோதிகளால் திசை திருப்படுகின்றன என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கூறியிருப்பதாவது:- “ போராட்டக்காரர்களின் கோரிக்கையை பரிசீலித்து அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.
மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அரசின் விளக்கத்தை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story