திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்
திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை,
திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய கட்டிடங்கள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 13.4.2018 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் 1,180 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூட்டரங்கம், கணினி அறை, வட்டாட்சியர் அறை, பதிவேடு அறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை காணொலிக் காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக திறந்து வைத்தார்.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்கள் தங்கிட ஏதுவாக உலக வங்கி நிதி உதவியுடன் கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை வாயிலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் டி.மாரியூர், கன்னிகாபுரி ஆகிய இடங்களில் 5 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பல்நோக்கு பாதுகாப்பு மையக் கட்டிடம், திருவொற்றியூரில் 13 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
புதிய வருவாய் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், கலசப்பாக்கம் மற்றும் போளூர் வட்டங்களை சீரமைத்து கோவிலூர் மதுரா ஜமுனாமரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஜமுனாமரத்தூர் புதிய வருவாய் வட்டம் மற்றும் திருவண்ணாமலை மற்றும் செய்யார் கோட்டங்களை சீரமைத்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆரணி புதிய வருவாய் கோட்டம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. மோகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, முதன்மைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story