மாலத்தீவு, லட்சத்தீவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை: தென்தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும்


மாலத்தீவு, லட்சத்தீவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை: தென்தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும்
x
தினத்தந்தி 15 April 2018 1:30 AM IST (Updated: 15 April 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

மாலத்தீவு, லட்சத்தீவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் தென்தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை, 

மாலத்தீவு, லட்சத்தீவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் தென்தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

2 நாட்களுக்கு முன்பு உருவான இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது அங்கிருந்து நகர்ந்து மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டிருப்பதால் இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் திசை காற்று

குமரிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு திசையில் நகர்ந்து, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக மாலத்தீவு மற்றும் லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென்தமிழக மீனவர்கள் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு கடல்பகுதிக்குள் நாளை(இன்று) வரை செல்ல வேண்டாம்.

மேலும், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி தொடர்ந்து தமிழகத்தின் உள்பகுதியில் நீடிக்கிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து இருக்கிறது.

கனமழை

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில்(இன்று), மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாலும், கிழக்கு, மேற்கு திசைகாற்று சந்திக்கின்ற பகுதி தமிழகத்தில் நிலவுவதாலும் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.

நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில், வழக்கமான வானிலையே நிலவும். வெயிலின் தாக்கம் தற்போது வரை இயல்பையொட்டி தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

விளாத்திக்குளம் 11 செ.மீ., சிவகங்கை 10 செ.மீ., பட்டுக்கோட்டை, குன்னூர், போடிநாயக்கனூரில் தலா 6 செ.மீ., பேச்சிப்பாறை, நாகர்கோவில், கமுதியில் தலா 5 செ.மீ., கோவில்பட்டி, பூதப்பாண்டி, கழுகுமலையில் தலா 4 செ.மீ., குளச்சல், பேரையூர், மேட்டுப்பாளையம், முதுகுளத்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

Next Story