அம்பேத்கர் உருவபடத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை


அம்பேத்கர் உருவபடத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை
x
தினத்தந்தி 15 April 2018 3:00 AM IST (Updated: 15 April 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் உருவபடத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

சென்னை, 

அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் உருவபடத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் பிறந்த நாள்

அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அவருடைய சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலையின் கீழே அவருடைய உருவபடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. சார்பில் அங்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அம்பேத்கர் உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிர்வாகிகள்-அமைச்சர்கள்

இதேபோல அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், சி.பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி உள்பட ஏராளமானோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.-காங்கிரஸ்

தி.மு.க. சார்பில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவபடத்துக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க.

பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரான மாதவன் தனது ஆதரவாளர்களோடு வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story