அட்சய திருதியை காரணமாக விலை உயர்வு: தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை நெருங்கியது


அட்சய திருதியை காரணமாக விலை உயர்வு: தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 16 April 2018 2:30 AM IST (Updated: 16 April 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

அட்சய திருதியை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது ரூ.24 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. ஒரு பவுன் தங்கம் நேற்று ரூ.23 ஆயிரத்து 936-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை, 

அட்சய திருதியை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது ரூ.24 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. ஒரு பவுன் தங்கம் நேற்று ரூ.23 ஆயிரத்து 936-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அட்சய திருதியை

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது ஐதீகம். இதனால் கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நகைக்கடைகள் சார்பில் சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) வருகிறது. இதனால் பல கடைகளில் தங்கநகை வாங்க தற்போதே பலர் முன்பதிவு செய்துள்ளனர்.

ரூ.24 ஆயிரத்தை நெருங்கியது

இதற்கிடையே அட்சய திருதியை காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் காலை கிராம் ரூ.2,970-க்கும், பவுன் ரூ.23,760-க்கும் தங்கம் விற்பனையானது. ஆனால் அன்றைய தினம் மாலையே தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி தங்கம் விலை உயர்ந்து கிராம் ரூ.2,992-க்கும், பவுன் ரூ.23,936-க்கும் விற்பனையானது. இதன்மூலம் தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அதனால் முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது.

அட்சய திருதியைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தங்கம் விலை எப்படி இருக்கும்? என்பது குறித்து சென்னை தங்கம்-வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறியதாவது:-

தங்கத்தின் மீது முதலீடு

சிரியா நாட்டின் மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் சேர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்கம் சர்வதேச பொருளாதாரத்தில் பலமாக எதிரொலித்து இருக்கிறது. சர்வதேச பங்குச்சந்தை மற்றும் உற்பத்தி துறையில் பொருளாதார பாதிப்பு மேலோங்கி இருக்கிறது.

இந்த பாதிப்பை தொடர்ந்து பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும்.

நகைகள் முன்பதிவு

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலையேற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையில், தற்போது நகைக்கடைகளில் தங்கத்துக்கான முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story