காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்ட ரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை எடப்பாடி பழனிசாமி பேட்டி


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்ட ரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 April 2018 3:00 AM IST (Updated: 16 April 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்ட ரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை என்று கோவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்ட ரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை என்று கோவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வருவதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் நேற்று கோவை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்டரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை. இது, சமூக வலைத்தளங்களில் சொல்லக்கூடிய பிரச்சினை அல்ல. பிரதமருக்கு ஒரு முதல்-அமைச்சர் கோரிக்கை வைக்கும் போது அதை எழுத்து மூலமாகத்தான் கொடுக்க முடியும். அதுதான் ஆதாரம்.

கோர்ட்டு தீர்ப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழாவின் போது இதுகுறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. தற்போது பிரதமர் வந்திருந்தபோது அவரிடம் விமான நிலையத்தில் வைத்து தமிழக மக்களின் உணர்வுகளை தெளிவாக எடுத்துக்கூறி உள்ளோம். மனுவும் கொடுத்து உள்ளோம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி விரைந்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும். தமிழகத்துக்கு தேவையான உரிமைகளை கோர்ட்டு அளித்திருக்கிறது. எனவே கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்த மாதம் (மே) 3-ந்தேதிக்கு பின்னரும் மத்திய அரசு காலதாமதம் செய்தால் என்ன செய்வீர்கள் என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். இது கற்பனையான கேள்வி. சுப்ரீம் கோர்ட்டு அழுத்தம், திருத்தமாக தெரிவித்து உள்ளது. நீதிபதிகள் மே 3-ந்தேதிக்குள் தாங்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது.

பசுமை தீர்ப்பாயம்

ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசு இதில் பணம் வாங்கி உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். கடந்த 2003-ம் ஆண்டு இந்த ஆலையை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மூட உத்தரவிட்டார். நாங்கள் பணம் பெற்றிருந்தால் ஆலையை மூட முடியுமா?

பின்னர் ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டு சில நிபந்தனைகள் அடிப்படையில் மீண்டும் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.

உண்மையல்ல

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரன் அணியினர் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தப்போகிறார்கள் என்பது கற்பனையான கேள்வி. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. எனவே நீதிபதிகள் தான் கூறவேண்டும்.

ஆஸ்பத்திரியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அவரை அமைச்சர்கள் சந்தித்ததாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் தவறான செய்தியை கூறியுள்ளார். அது உண்மையல்ல. யாரையோ தப்பிக்கவைக்க அவ்வாறு அவர் கூறுகிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் முதல்-அமைச்சர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story