ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 16 இடங்களில் பொதுமக்கள் போராட்டம்


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 16 இடங்களில் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 April 2018 11:43 AM IST (Updated: 16 April 2018 11:43 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 16 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Sterlite #SterliteProtest

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி உள்ளிட்ட 14 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், மத்திய-மாநில அரசுகள் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தினமும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 64-வது நாளை எட்டியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ‘மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தேவைப்பட்டால் சட்டமன்றத்தைக் கூட்டி அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.

இதனிடையே இளைஞர் காங்கிரசார், முன்னாள் பொதுச்செயலாளர் சகாயராஜ் தலைமையில், நேற்று மாலையில் ஸ்டெர்லைட் ஆலை முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிப்காட் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 76 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மேலும் 2 இடங்களில் பொது மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பிரசித்திப் பெற்ற பனிமய மாதா ஆலயத்தில் நேற்று பொதுமக்கள் கருப்பு கொடியை ஏற்றினார்கள். பின்னர் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து கோ‌ஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல தூத்துக்குடி முத்தம்மாள் காலனி மக்களும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் அங்குள்ள மைதானத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடிப் பகுதியில் மொத்தம் 16 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பெண்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இந்த வாகன பிரச்சாரம் நாளை மாலை கோவில்பட்டியில் தொடங்க உள்ளது. தொடர்ந்து எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் பகுதியில் வாகனப் பிரசாரம் நடக்கிறது.

தொடர்ந்து நாளை மறுநாளும் 21, 22-ந்தேதிகளிலும் வைகோ பிரசாரம் செய்கிறார். 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றிகையிட்டு போராட வருவார்கள் என கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story