மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு பேராசிரியை கைது செய்யக்கோரி மகளிர் அமைப்பினர் போராட்டம்
மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு பேராசிரியை கைது செய்யக்கோரி பெற்றோர் மற்றும் மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. அப்பகுதியில் பிரபலமான இந்த கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்தக் கல்லூரியின் கணித துறை பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளிடம் போனில் பேசி பாலியலுக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் 4 மாணவிகளும் ஒரே இடத்தில் இருக்கும்போது, அதில் ஒரு மாணவியின் செல்போனில் நிர்மலா தேவி பேசுகிறார். இவ்வளவு நாள் ஆசிரியை, மாணவி என்ற உறவில் இருந்தோம். இனி, நான் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப் போகிறேன். 4 பேரும் ஒரே இடத்தில்தானே இருக்கிறீர்கள் என்று பேச்சை தொடங்குகிறார்.
வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையே என்று கேட்டு விட்டு தொடர்ந்து பேசும் அவர், தேர்வில் உங்களுக்கு மார்க் குறையாமல் பார்த்துக் கொள்கிறேன். அதற்கு நான் சொல்கிறபடி நீங்கள் கேட்க வேண்டும்.
மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலர் உங்களை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் எல்லாம் புத்திசாலிகள். நான் சொல்வதை புரிந்து கொள்வீர்கள் என்றார். பேராசிரியை நிர்மலாதேவியின் பேச்சு தங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்லப் போகிறது என்பதை புரிந்து கொண்ட மாணவி, மேடம், எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. இனி அதுபற்றி பேசாதீர்கள் என்று கூறுகிறார். இருப்பினும் தொடர்ந்து நிர்மலாதேவி 4 மாணவிகளையும் அதிகாரிகள் ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்துகிறார்.
நான் சொல்லும் விஷயத்துக்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் படிப்பு விஷயத்திலும் நீங்கள் மேலே சென்று விடலாம். பொருளாதார ரீதியாகவும் உங்கள் குடும்ப கஷ்டம் தீர்ந்து விடும். பணமும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்.
அப்போதும் மாணவிகள் வேண்டாம் என்கிறார்கள். இருப்பினும் விடாமல் தொடர்ந்து பேசும் நிர்மலா தேவி நீங்கள் உங்கள் விருப்பப்படி இந்த விஷயத்தில் நடந்து கொள்ளலாம். பெற்றோர்களிடம் சொல்லுங்கள். ஒரு சிலர் ஒத்துக்கொள்வார்கள். இல்லையென்றால் நீங்கள் சுயமாக முடிவெடுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் இந்த விஷயம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்று தனது பேச்சின்போது திரும்பத் திரும்பக் கூறுகிறார். இதற்கு பதில் அளிக்கும் மாணவிகள் யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று உறுதி அளிக்கிறார்கள்.
இதன் பின்னரும் போனை துண்டிக்காமல் நிர்மலாதேவி, இருங்கடா கண்ணுகளா... என்று கூறி விட்டு தனது பேச்சை தொடர்கிறார். இன்று வியாழக்கிழமை. இன்னும் 2 நாள் இருக்கு. நல்லா யோசித்து ஞாயிற்றுக்கிழமை சொல்லுங்கள். அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி இருக்கு. அதற்காகத்தான் உங்களை கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னையும் டெஸ்ட் பண்ணிட்டுத்தான் கேட்குறாங்க. இந்த வாய்ப்பு அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது. நல்லா யோசிச்சு சொல்லுங்க என்று மீண்டும் கூறுகிறார்.
இப்படி நீண்டு கொண்டே செல்லும் இந்த ஆடியோ பேச்சு 19 நிமிடங்கள் ஓடுகிறது. இதன் மூலம் மாணவிகளிடம் எப்படியும் ஆசைவார்த்தைகளை கூறி தன்பக்கம் இழுத்து விடலாம் என்பதில் நிர்மலாதேவி உறுதியுடன் பேசுவது அம்பலமாகி உள்ளது.
இந்த மாணவிகளுக்கு குருவாக இருக்க வேண்டிய பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் புரோக்கராக மாறி போனில் பேசிய ஆடியோ பேச்சு வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி நிர்மலாதேவியின் பின்னணியில் இருக்கும் பல்கலைக்கழக அதிகாரிகள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின்னரே மாணவிகளை ஆசைக்கு இணங்க சம்மதிக்க வைக்குமாறு நிர்மலா தேவியிடம் அறிவுறுத்தியது யார்-யார்? என்பது தெரியவரும். அப்போது அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தை மதுரை பல்கலைக்கழகமும் கல்லூரி நிர்வாகமும் தீவிரமாக கையில் எடுத்துள்ளது. முதல்கட்ட நடவடிக்கையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரான செல்லத்துரை கூறும்போது, நிர்மலா தேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இதன் பின்னர் இந்த விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பேராசிரியை நிர்மலா தேவி கூறி இருப்பதாவது:-
குறிப்பிட்ட 4 மாணவிகளிடமும் போனில் பேசியது நான் தான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் எனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் அந்த மாணவிகளிடம் எந்த தவறான நோக்கத்துடனும் பேசவில்லை. இவ்வாறு பேராசிரியை கூறி உள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர், மகளிர் அமைப்பினர் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ. செல்லப்பா, தாசில்தார் கார்த்தியாயினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முருகன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story