எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜர்


எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் செசன்சு கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் செசன்சு கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் டி.டி.வி.தினகரன். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, அமைச்சர்கள் எல்லாரும் கீழ்ப்பாக்கம் செல்லவேண்டியவர்கள் என்று கூறியிருந்தார்.

இவ்வாறு அவர் கூறியது தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக, சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற அமைச்சர்கள் சார்பில், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை மாநகர அரசு குற்றவியல் தலைமை வக்கீல் கவுரி அசோகன் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு மனுவில், ‘முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் குறித்து டி.டி.வி.தினகரன் தெரிவித்த கருத்து, பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டி.டி.வி.தினகரன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி சுபாதேவி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் தன்னுடைய ஆதரவாளர்கள் புடைசூழ கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது நீதிபதி, ‘இவ்வளவு பெரிய கூட்டம் கோர்ட்டில் இருந்தால், வழக்கை விசாரிக்க முடியாது. எனவே, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கிறேன். அன்று டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகவேண்டும்’ என்று கூறினார்.

இதையடுத்து அவரது வக்கீல், ‘ஆதரவாளர்களை எல்லாம் போகச்சொல்லி விடுகிறோம். இந்த வழக்கை இப்போதே விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

பின்னர், மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது, டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு வழக்கு ஆவணங்களின் நகல் வழங்கப்பட்டன.

பின்னர், விசாரணையை வருகிற ஜூன் 28-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அவதூறு வழக்குகள் பல தொடரப்பட்டன. அந்த வழக்குகள் எல்லாம் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின், முதல் முதலாக டி.டி.வி.தினகரன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த டி.டி.வி.தினகரன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘ஜெயலலிதா சிலையை வடிவமைத்தது தொடர்பாக நான் தெரிவித்த கருத்துக்கு என் மீது வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். தமிழ்நாட்டில் தற்போது நடப்பது மக்கள் விரோத ஆட்சி.

இவர்கள் யாரால் ஆட்சிக்கு வந்தார்களோ அவர்களுக்கே துரோகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர். ஆறுமுகச்சாமி விசாரணை கமிஷனில், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் கூறியுள்ள கருத்து யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ இல்லை. ஆனால், அவர் கூறியுள்ள கருத்துகளை கண்டு ஆட்சியாளர்கள் பயப்படுகின்றனர்’ என்று கூறினார்.

மேலும் அவர், ‘18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு விரைவில் வரும். அன்று ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ யாரென்று வெளியுலகத்துக்கு தெரியவரும்’ என்றும் கூறினார்.

Next Story