சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தூக்கு தண்டனை வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாலியல் வன்கொடுமை
சிறுமி ஆசிபாவுக்கு நடந்த கொடுமை மனிதாபிமானம் கொண்டவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. இந்த சோகம் மறைவதற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடலை வீசி எறிந்து விட்டு கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அந்த சிறுமியை வெறியர்கள் 8 முதல் 10 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதே போன்ற கொடூரம் உத்தரப்பிரதேசத்திலும் நடந்திருக்கிறது. சிறுமி ஒருவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் ஷெங்கார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தமிழ்நாட்டிலும், இந்த அளவுக்கு கொடூரமாக இல்லாவிட்டாலும், மனிதத்தன்மைக்கு ஒவ்வாத வகையில் பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 6 வயது ஹசீனா, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி புனிதா, திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்த 4 வயது குழந்தை மகாலட்சுமி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
தூக்கு தண்டனை
காரைக்காலில், தமிழ்நாட்டின் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட எவரும் இன்று வரை தண்டிக்கப்படவில்லை என்பது சோகம்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. இத்தகையக் குற்றங்களுக்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க முடியும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story