பேராசிரியை விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும்; சிபிஐ விசாரணை தேவையில்லை - ஆளுநர் பன்வாரிலால்
மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஆளுநர் பன்வாரிலால் கூறிஉள்ளார். #BanwarilalPurohit
சென்னை,
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்கிறது. சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களை சந்தித்து பேசிவருகிறார். அவர் பேசுகையில், மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
பேராசிரியர் விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். காமராஜர் பல்கலை. பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரி சந்தானம் நேர்மையானவர். இந்த விவகாரத்தில் யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒருமாதம் காத்திருந்தது ஏன் என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். சட்ட விதிகளின்படியே சந்தானம் தலைமையில் விசாரணை குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது.
பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை, விசாரணை ஆணைய அறிக்கை கிடைத்தவுடன் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை குறித்து முடிவு செய்யப்படும். இப்போது தேவையில்லை என கூறிஉள்ள ஆளுநர் பன்வாரிலால் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
Related Tags :
Next Story