பெண்பத்திரிக்கையாளர் கன்னத்தை தடவிய கவர்னருக்கு கண்டனம்


பெண்பத்திரிக்கையாளர் கன்னத்தை தடவிய கவர்னருக்கு கண்டனம்
x
தினத்தந்தி 18 April 2018 10:47 AM IST (Updated: 18 April 2018 10:47 AM IST)
t-max-icont-min-icon

பெண்பத்திரிக்கையாளர் கன்னத்தை தடவிய கவர்னர் பன்வாரிலால் புரோக்கித்துக்கு கண்டனம் எழுந்துள்ளது. #BanwarilalPurohit

சென்னை 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரிப் பெண்களைத் தவறாக வழிநடத்த முனைந்ததாக அந்தக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் பேசியதாக வெளியான ஆடியோவில் ஆளுநர் அளவிற்கு தனக்குச் செல்வாக்கு இருப்பதைப் பதிவு செய்திருந்ததை அடுத்து தமிழக ஆளுநர் மீதான குற்றச்சாட்டாக விவகாரம் உருவெடுத்தது. 

இந்த நிலையில் ஆளுநரே இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தார்.ஆனாலும் எதிர்கட்சிகள் ஆளுநர் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்றும் விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் புரோகித் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

கடந்த அக்டோபரில் ஆளுநராக பதவியேற்ற பின், அவர் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை. நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாகத் தான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்றும் பதவியேற்று ஆறுமாதங்கள் ஆனதாலேயே சந்திப்பதாகவும் அடுத்த ஆறு மாதங்களில் மீண்டும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறினார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாகப் கேள்விகள் கேட்கப்பட்டன. 

நடந்துமுடிந்த செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன், ' செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் என் அனுமதியின்றி எனது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். 

அவர் செய்தது அவருக்கு வேண்டுமென்றால் தாத்தா என்கிற ரீதியில் செய்ததாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது தவறு. இப்போதும் எனது கன்னத்தை கழுவித் துடைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் செய்த செயலை என்னால் நினைவில் இருந்து அகற்ற முடியவில்லை. முன்பின் தெரியாத நபரை அதுவும் ஒரு பெண்ணிடம் அப்படி நடந்துகொள்வது ஏற்புடையதல்ல கவர்னர் அவர்களே' என்று கொதித்த வரிகளால் பதிவிட்டு உள்ளார்.
ஆறுமாதமாகச் செய்தியாளர்களைச் சந்திக்காத ஆளுநர் இப்படியான சர்ச்சைகளுக்கு நடுவே செய்தியாளர்களைச் சந்தித்தது எதற்கு என்கிற கேள்வி ஒருபக்கம் உள்ள நிலையில், தமிழக ஆளுநரின் இந்தச் செயல் அவரை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த செயலுக்கு தி.மு.க எம்பி கனிமொழியும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

Next Story