“பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய வேண்டும்” பொன்.ராதாகிருஷ்ணன்


“பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய வேண்டும்” பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 19 April 2018 4:15 AM IST (Updated: 19 April 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய வேண்டும். கவர்னரை கொச்சைப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்” என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #Nirmaladevi

நாகர்கோவில், 

அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்திலும் 10 இடங்களில் தூய்மை பணி நடந்தது. வடசேரி காந்தி பார்க்கில் மத்திய மத்திரி பொன்.ராதா கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொன்.ராதாகிருஷ்ணன் மண் வெட்டி மூலம் குப்பைகளை சேகரித்தார். பின்னர் கைகளால் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தினார்.

முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்த முயற்சித்து செல்போனில் பேசியது முதல் முறை போன்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக இதுபோன்று அவர் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எனவே இதன் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். இதுபோன்று அந்த ஒரு கல்லூரியில் மட்டும்தான் நடந்ததா? அல்லது வேறு கல்லூரி மாணவிகளுக்கும், வேறு பெண்களுக்கும் இது போன்ற தொல்லை நடந்திருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்வது அவசியம். மாணவிகளை பாலியலில் ஈடுபட முயற்சித்த கல்லூரி பேராசிரியை மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.

காவிரி பிரச்சினை சுமார் 100 ஆண்டுகளாகவே இருக்கிறது. ஆனால் தற்போது வெறும் 100 நாட்களில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் எப்படி முடியும்? காவிரி விவகாரத்தில் ஒட்டு மொத்த பிரச்சினையையும் உருவாக்கியதே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான். ஆனால் தற்போது அவர்கள் தீர்வு கேட்டும் போராடுகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் கேட்க மாட்டோம், பிரதமர் நரேந்திரமோடி கூறுவதையும் கேட்க மாட்டோம் என்று சொல்லக் கூடிய அரசு, கர்நாடகாவில் இருந்து அகற்றப்பட வேண்டும். எனவே கர்நாடகாவில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். பா.ஜனதா வெற்றி பெற்றால் தான் தமிழகத்துக்கு நன்மை நடக்கும்.

சமூக வலைதளங்களுக்குள் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஊடுருவி எந்த தலைவர்களாக இருந்தாலும் கொச்சைப்படுத்தி கருத்து வெளியிடுகிறார்கள். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதற்காகவே அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களுக்குள் ஊடுருவுவதை தடுப்பது அவசியம்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story