பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : 7 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : 7 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
x
தினத்தந்தி 19 April 2018 11:49 AM IST (Updated: 19 April 2018 11:49 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் 7 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டு உள்ளது. #Nirmaladevi

விருதுநகர், 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.  அவர் மீது 3 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இதற்கிடையே இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று அதிரடி விசாரணை தொடங்கினார்கள்.

பேராசிரியை நிர்மலா தேவியிடம் ஏற்கனவே விசாரித்த அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மயில், மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரியை சந்தித்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர்.

பேராசிரியை நிர்மலா தேவி கொடுத்துள்ள வாக்கு மூலம், அவரிடம் கைப் பற்றப்பட்ட 3 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் மற்றும் மாணவிகளிடம் பேசும் செல் போன் பேச்சுப்பதிவு ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.

ஆவணங்கள் குறித்து, விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பேராசிரியை நிர்மலா தேவியை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

7 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து உள்ளனர். டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் தலைமையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story