பயங்கரவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்
பயங்கரவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #ponRadhakrishnan
தென்காசி,
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தென்காசிக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பயங்கரவாதிகள் பல நிலைகளில் இருந்து தீவிரவாத பயிற்சியை அளிக்கிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. கேரளாவில் இருந்து தென்காசிக்கு பயங்கரவாதிகள் வந்து தீவிரவாத பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்வதாக அங்கு இருந்து வந்தவர்கள் கூறுகிறார்கள்.
இதனால் தமிழகம் மற்றும் கேரளத்திற்கு பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்கள் தற்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் செயல்படுத்தப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில் மட்டமான கருத்துகளை பதிவு செய்கிறார்கள்.
எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து தவறாக பதிவு செய்துள்ளார் என்று கூறுகிறீர்கள். எனக்கு இப்போது தான் தகவல் கிடைத்துள்ளது. என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்கள் கவுரவம் மிக்கவர்கள்.
ஒரு பேராசிரியை செல்போனில் பேசியதை சிறிதளவு கேட்டேன். கேட்பதற்கே அசிங்கமாக உள்ளது. பயிற்சி பெற்று பலமுறை பேசியது போலதான் உள்ளது. அவர் மூலம் பயன்பெற்றவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
அவர் பணியாற்றிய கல்லூரி நிர்வாகம் இவ்வளவு காலம் அவரை ஏன் வைத்திருந்தது.
இந்த விஷயத்தில் மரியாதைக்குரிய கவர்னரை எவ்வித அச்சம்கூட இல்லாமல் கொச்சைப்படுத்தி உள்ளார். இதில் யார் பின்னணி உள்ளது? ஏன் மக்களை திசை திருப்புகிறீர்கள்? தமிழக மக்கள் முட்டாள் இல்லை. அவா் பேசிய தொனியை பார்க்கும் போது நீண்ட நாட்களாக இவ்வாறு நடந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் இதனை கேட்டது மாணவிகள் தானா? அல்லது வேறு யாருமா என்பதையும் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Related Tags :
Next Story